தமிழ்நாடு

'ஃபானி புயல் சென்‌னையை நெ‌ரு‌ங்காது' - வானிலை ‌ஆய்வு மையம்

'ஃபானி புயல் சென்‌னையை நெ‌ரு‌ங்காது' - வானிலை ‌ஆய்வு மையம்

webteam

ஃபானி புயல் சென்‌னையை நெ‌ரு‌ங்காது என்று சென்னை வானிலை ‌ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கி‌ழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபானி புயல் மேலும் வலுப்பெற்று மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 1200 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும், இன்று அது தீவிர புயலாகவும், அதன் பின்னர் அதிதீவிர புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 30 ம் தேதி வரை இது வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாகவும் அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வட கிழக்கு திசையில் திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி வட தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து சுமார் 200 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே புயல் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும், புயல் தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு குறைவு என்றும் கூறியுள்ளது. 

இதனால் வட தமிழகப் பகுதிகளில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்றிலிருந்து மே ஒன்றாம் தேதி வரை மீனவர்கள் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.