தமிழ்நாடு

உயிர் காக்கும் உடைகளுக்கு தட்டுப்பாடு : ஒகேனக்கல் பரிதாபம்!

உயிர் காக்கும் உடைகளுக்கு தட்டுப்பாடு : ஒகேனக்கல் பரிதாபம்!

webteam

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ளது ஒகேனக்கல் சுற்றுலாத் தலம். கர்நாடக மாநிலத்தைக் கடந்து காவிரி ஆறு இங்கு அருவிகளாக ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவி என இங்குள்ள அருவிகளை காண சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர். கோடை விடுமுறை நாட்களில் ஒகேனக்கல்லுக்கு வருவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்கும். அவ்வாறு வருவோர் பிரதான அருவிகளில் குளித்து குடும்பத்துடன் பரிசலில் சென்று அருவிகளைச் சுற்றிப்பார்க்க பரிசல் துறைக்கு வருகின்றனர்.

ஒகேனக்கல் அருவியில் பரிசல் சவாரிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல 400க்கும் மேற்பட்ட பரிசல்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நிகழ்ந்த பரிசல் விபத்துக்குப் பிறகு, பரிசல் ஓட்டிகளுக்கு, தருமபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த வகையில், ஒரு பரிசலில் நால்வரை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும். பரிசல் சவாரியில் குழந்தைகள் உட்பட யாராகயிருந்தாலும், உயிர் காக்கும் உடையின்றி யாரையும் அழைத்துச் செல்லக் கூடாது. ஒரே நேரத்தில் பல பரிசல்களை இணைத்து அருவிக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்டவை இந்த நிபந்தனைகளில் அடங்கும். மேலும் ஒரு பரிசலில் நான்கு நபர்களை அழைத்துச் செல்ல ரூ.750 கட்டணமாகப் பெறப்படுகிறது. இதில் ரூ.150 பராமரிப்பு மற்றும் நுழைவுக் கட்டணம் என பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு, மீதமுள்ள ரூ.600 பரிசல் ஓட்டிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஒகேனக்கல் அருவியில் பரிசல் சவாரிக்கு சுமார் 1,500 உயிர் காக்கும் உடை தேவைப்படுப்படும் எனக் கூறப்படுகிறது. தற்போது 500 உயிர் காக்கும் உடைகள் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. இதிலும், பல உடைகள் பழுதாக உள்ளது எனக் கூறி 250 உயிர் காக்கும் உடைகள் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படுகின்ற உடைகளும் சேதமடைந்துள்ளது. இந்தப் பாதுகாப்பு உடையில் எறும்பு, வண்டுகள், பூச்சிகள் உள்ளே நுழைந்து, கடித்துவிடுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உடைகள், வெறும் பெயரளவுக்கே வழங்கப்படுவதாகவும் பலர் குறை கூறுகின்றனர். அத்துடன் காலதாமதத்தால் பல நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கும் பரிசல் துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் நிகழ்வது தொடர்கிறது.

இதுகுறித்து பென்னாகரம் வட்டார வளார்ச்சி அலுவலர் கிருஸ்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோது,

“ஒகேனக்கல்லில் பரிசலில் சென்று சுற்றி வர சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாகும். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க, இரண்டு மணி நேரமாக பரிசல் பயணம் பிரிக்கப்பட்டு, ஒரு முறை 75 பரிசல் மட்டுமே இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. 75 பரிசல்களை இயக்க போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில பழைய உபகரணங்கள் பழுதாகி இருப்பதால், அதனை மாற்றி புதியதாக வாங்குவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு கோப்புகள் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் காத்திருப்பதற்கு காரணம், பரிசல் ஓட்டிகள் பரிசல் பயணம் செல்பவர்களை, ஆற்றில் குளிக்க வைப்பது, ஓய்வுக்காக நிறுத்தி காலதாமதமாக்கி வருவதேயாகும். அதனை சரிசெய்ய விரைவில் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

(தகவல்கள் - விவேகானந்தன், புதிய தலைமுறை செய்தியாளர், தருமபுரி)