திருப்பத்தூர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

அப்பாடா பிடிச்சாச்சு...! திருப்பத்தூரில் 11 மணி நேரம் போக்கு காட்டிய சிறுத்தை! சிக்கியது எப்படி?

திருப்பத்தூர் நகரில் புகுந்த சிறுத்தையால் இரண்டு கார்களுக்குள் 5 மணி நேரமாக தவித்த 5 பேரை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

PT WEB

திருப்பத்தூர் நகரில் புகுந்த சிறுத்தையால் இரண்டு கார்களுக்குள் 5 மணி நேரமாக தவித்த 5 பேரை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்கப்பட்டது. திருப்பத்தூர் சாமநகரில் உள்ள தனியார் பள்ளிக்குள் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திடீரென சிறுத்தை ஒன்று புகுந்தது. பள்ளியில் பராமரிப்பு ஈடுபட்டிருந்த கோபால் என்பவர், சிறுத்தை தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.

இதனால் பள்ளி அமைந்துள்ள பகுதி முழுவதும் பரபரப்பாக காட்சியளித்த நிலையில், மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மற்றொருபுறம் சிறுத்தையை தேடும் பணியையும் துரிதமாக மேற்கொண்டனர். அப்போது பள்ளி வளாகத்தையொட்டி சாமநகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, அங்குள்ள கார் ஷெட்டுக்குள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

சிறுத்தை நுழைந்ததால், கார் ஷெட் காவலாளி, ஓட்டுநர்கள் என 5 பேர், 2 கார்களுக்குள் ஏறி கதவை மூடிக்கொண்டனர். காருக்குள் இருந்தவர்களை வனத்துறை மற்றும் காவல்துறையினர் செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசினர். அவர்கள், காரில் அமர்ந்துகொண்டே சிறுத்தையின் நடமாட்டம் குறித்து, வெளியில் இருக்கும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனடிப்படையில் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு, 2 கார்களுக்குள் சுமார் 5 மணி நேரமாக தவித்த 5 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

இதைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்கான பணிகளை வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டனர். சிறுத்தை தஞ்சடைந்த கார் ஷெட் அமைந்துள்ள பகுதியில் குடியிருப்புகளும் உள்ளதால், அப்பகுதி முழுவதையும் வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என ஒலிபெருக்கியில் எச்சரித்தனர்.

மேலும், கார் ஷெட் அமைந்துள்ள பகுதியை சுற்றி வலைகளை அமைத்தனர். சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக, ஓசூரில் இருந்து மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டது.

மண்டல வன பாதுகாவலர் பத்மாவதி மற்றும் கோவை வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர், கார் ஷெட்டுக்குள் சென்று மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடிபட்ட சிறுத்தையை கூண்டுக்குள் அடைத்து, அதற்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்து, காப்புக்காட்டில் விட எடுத்துச் சென்றனர்.

இதுபோன்ற வனவிலங்குகள் நகர் பகுதிக்குள் வராமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உறுதி அளித்துள்ளார்.