செய்தியாளர் - மகேஷ்வரன்
பந்தலூரில் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினருக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது கும்கி யானை பொம்மன். குறிப்பாக இறுதிகட்டத்தில் கால்நடை மருத்துவரை தன் மீது பாதுகாப்பாக ஏற்றிச்சென்று சிறுத்தைக்கு சரியாக மயக்க ஊசி செலுத்துவதற்கு பெரிதும் உதவியாக பொம்மன் இருந்ததாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் குழந்தை உட்பட இருவரை கொன்ற சிறுத்தை கடந்த 7 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கடந்த 2 ஆம் தேதி முதல் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பல்வேறு கட்ட முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டனர். அதற்காக 6 இடங்களில் கூண்டு வைக்கும் சிறுத்தை அதில் சிக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 6 ஆம் 3 வயது குழந்தையை சிறுத்தை கொன்றது.
இதனை அடுத்து 7 ஆம் தேதி அதிகாலை சிறுத்தையை பிடிக்கும் பணிக்காக முதுமலையிலிருந்து கும்கி யானை பொம்மன் பந்தலூருக்கு கொண்டுவரப்பட்டது. ஏற்கெனவே பல்வேறு இடங்களில் காட்டு யானைகளை பிடிப்பதற்கும், விரட்டுவதற்கும் இந்த கும்கி யானை பொம்மன் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
7 ஆம் தேதி காலை சுமார் 8 மணி அளவில் பந்தலூருக்கு வந்த கும்கி யானை பொம்மனை, உடனடியாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுத்தினர். பொதுவாக இது போன்ற நேரங்களில் யானையின் மீது அம்பாரி கட்டி அதில் கால்நடை மருத்துவர் அமர்ந்தவாறு சென்று மயக்க ஊசி செலுத்துவார்.
ஆனால் அன்றைய தினம் பொம்மன் யானை மீது கட்டுவதற்கு அம்பாரி இல்லாத நிலையில், யானை பாகன் கேத்தன் தனக்கு பின்னால் கால்நடை மருத்துவரை அமர வைத்து அவரை அழைத்து சென்றார். சருகலான தேயிலை தோட்ட பகுதிக்கு மத்தியில் உள்ள புதர் பகுதியில் சிறுத்தை பதுங்கி இருந்ததை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
இதனை அடுத்து கும்கி யானை மீது அமர்ந்த கால்நடை மருத்துவர் ராஜேஷ், பாகன் கேத்தன் உதவியுடன் புதருக்குள் மறைந்திருந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டார். பல நேரங்களில் கால்நடை மருத்துவர் யானையின் மீது நின்றபடி சிறுத்தையை புதருக்குள் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டார்.
அப்போது யானை பாகன் கேத்தன் ஒரு கையால் மருத்துவர் கீழே விழாமல் பிடித்துக் கொண்டும், மற்றொரு கையில் யானையை கட்டுப்படுத்தியும் சிறப்பாக பணியாற்றினார்.
பின்னர் புதர் பகுதியில் சிறிது நேரம் சென்ற கும்கி யானை பொம்மன், சிறுத்தை இருக்கும் இடத்தை கண்டு வாசம் பிடித்தது. இதனை உணர்ந்து கொண்ட பாகன் கேத்தன், சிறுத்தை இருப்பதை உறுதி செய்தார். தொடர்ந்து கால்நடை மருத்துவரும் சிறுத்தையை மிக அருகில் பார்த்துள்ளார். இரண்டு முறை மயக்க ஊசி செலுத்த முயன்ற போது வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
3 வது முறை யானை பாகன் கேத்தன், பொம்மன் யானையை சரியான இடத்தில் நிறுத்தி மயக்க ஊசி செலுத்துவதற்கான வாய்ப்பை மருத்துவருக்கு ஏற்படுத்தி கொடுத்தார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய மருத்துவர் ராஜேஷ் சிறுத்தைக்கு மயக்க ஊசியை வெற்றிகரமாக செலுத்தினார். இதனை அடுத்து தயார் நிலையில் இருந்த வனத்துறை பணியாளர்கள் மயங்கிய சிறுத்தை வெற்றிகரமாக வலையில் பிடித்து, கூண்டில் அடைத்தனர்.
இந்த நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை பிடிக்க உதவிய கும்கி யானை பொம்மன் மற்றும் அதன் பாகன் கேத்தன், சாமர்த்தியமாக செயல்பட்ட மருத்துவர் ராஜேஷ் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சிறுத்தை பிடிப்பதில் தான் சிறப்பாக செயல்பட்டதை எண்ணியும், அதற்கு தனது யானை பொம்மை நல்ல ஒத்துழைப்பு வழங்கியதை குறிப்பிட்டும் தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக யானை பாகன் கேத்தன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.