தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 80 சதவிகித பணியிடங்களை தமிழர்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் வேலைக்குச் சேர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. முறைகேடான வழிகளில் தமிழர்களது வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து பறித்துவரும் வடமாநிலத்தவர்களின் மேலாதிக்கத்தைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திராவிட அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத மின்மிகு நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், உள்ளிட்ட பல்வேறு இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் 95 விழுக்காட்டிற்கு மேல் வடவர்களால் நிரப்பப்பட்டுப் பல்லாண்டு காலமாகவே தமிழர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தவர்கள் என்பதால் இந்தி பேசும் மாநிலத்தவரை வேலையில் அமர்த்தும் பணியை மறைமுகமாகச் செய்கின்றனர் என்பதே எதார்த்த உண்மையாக உள்ளது.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் தொழில் பழகுநர் இடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,765 பேரில் 1,600 பேர் வடவர்களாவர். இதே போன்று 2012ம் ஆண்டுச் சென்னை ரயில்வே மண்டலத்தில் 884 காலிப்பணியிடங்களை நிரப்பியபோது தமிழகத்தைச் சேர்ந்த 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். 2013ம் ஆண்டு ரயில்வே குரூப்-டி பணிக்காக 2,362 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் 74 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தால் (BHEL) பணியமர்த்தப்பட்ட138 பொறியாளர்களில் ஒருவர்கூடத் தமிழர் இல்லை. 2008ம் ஆண்டு நிரப்பப்பட்ட 77 செயற்பொறியாளர் பணியிடங்களில் 17 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஆவடி கனரக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நிரப்பப்பட்ட 100 சார்ஜ்மென் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேருக்கும், 2011ம் ஆண்டு நிரப்பப்பட்ட 108 பயிற்சியாளர் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. 2008ம் ஆண்டுச் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் 200 உதவியாளர்கள் பணியிடம் நிரப்பப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கும், 2014ம் ஆண்டு 78 பணியிடங்கள் நிரப்பப்பட்டபோது 3 பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. அதே போன்று 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழே தெரியாத ஹரியானா மாநிலத்தவர்கள் தமிழில் 25க்கு 24 என அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழகத்து அஞ்சலகங்களில் பணிவாய்ப்பினை பெற்றனர்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">போலிச்சான்றிதழ் மூலம் தமிழர்களது வேலைவாய்ப்புகளைப் பறித்து மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்!<a href="https://t.co/htpxxfdf2B">https://t.co/htpxxfdf2B</a> <a href="https://t.co/jxbmCg5qfs">pic.twitter.com/jxbmCg5qfs</a></p>— சீமான் (@SeemanOfficial) <a href="https://twitter.com/SeemanOfficial/status/1515023503829118977?ref_src=twsrc%5Etfw">April 15, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
தற்போது பிடிபட்டுள்ள 300 பேரால் பெரிய முறைகேடுகளின் சிறு பகுதி வெளிவந்துள்ளது. இன்னும் பிடிபடாத எத்தனை ஆயிரம் பேர் இவ்வாறு போலிச்சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்துள்ளனர்? எத்தனை ஆண்டுகளாக இந்த முறைகேடுகள் நடந்தேறுகிறது? அவற்றையெல்லாம் யார் சோதனை செய்து உறுதிப்படுத்துவது?. இந்தி திணிப்பினை கடுமையாக எதிர்க்கும் தமிழ்நாட்டில் இந்திக்காரர்களைத் திணிக்கும் மறைமுகச் சூழ்ச்சியும், இத்தகைய முறைகேடான பணியமர்த்தல்களின் பின்புலத்தில் உள்ளதென்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. மெல்ல மெல்லத் தமிழர்களின் விழுக்காட்டைக் குறைப்பதன் மூலம் தமிழர்கள் தங்களது அரசியல் அதிகாரத்தை இழக்கும் பேராபத்தும் விரைவில் ஏற்படக்கூடும். அதோடு குற்றச்செயல்களும் நாளுக்குநாள் பெருகி தமிழ்நாடு மெல்ல மெல்ல வாழத்தகுதியற்ற நிலமாகவும் மாற்றப்படுகிறது.
இந்திய ஒன்றிய அரசின் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியிடங்கள் என்று பல்கிப் பெருகிய வடவர்கள் ஆதிக்கம் தனியார் பெருநிறுவனங்களிலும் தொடர்வதோடு நிற்காமல், தமிழ்நாட்டிலுள்ள கட்டிட பணிகள், அனைத்து விதமான கடைகள், சிறுகுறு தொழிற்சாலைகள் என அனைத்திலும் குறைந்த ஊதியத்திற்கு உடலுழைப்புப் பணிகளுக்குச் சேர்ந்துள்ளவர்களால், தமிழர்களின் பணிவாய்ப்பு அடியோடு பறிபோவதோடு, தமிழர்கள் போராடிப்பெற்ற குறைந்தபட்ச அடிப்படை ஊதிய உத்தரவாதத்தையும் பல ஆண்டுகள் பின்னுக்குத்தள்ளி இல்லாதொழிக்கின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டில், தமிழர்களின் அரசியல் அதிகாரம், வணிகம், பொருளாதாரம் பெருமளவு தமிழர் அல்லாதவர்களே கைப்பற்றியுள்ள நிலையில், அனைத்து விதமான வேலை வாய்ப்புகளையும் வடவர்களிடம் பறிகொடுத்தால் தமிழர்கள் சொந்த மண்ணிலேயே அதிகாரமற்ற ஏதிலிகளாகவும், நிலமற்ற கூலிகளாகவும் மாற்றப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரகண்ட், மிசோரம், சிக்கிம், மணிப்பூர், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தனிச்சட்டமே இயற்றியுள்ளன. அதுபோன்று தனியார்த் துறைகளில் 80 விழுக்காடு அளவுக்கு மண்ணின் மைந்தர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க வேண்டுமென்று கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகள் சட்டமியற்றியுள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என்று நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தனிச்சட்டம் நிறைவேற்றி மேலும், போலிச்சான்றிதழ் கொடுத்து ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்த 300 வடமாநிலத்தவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்" என தெரிவித்திருக்கிறார்