மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட எல்இடி திரைப்பந்தலில் பொதுமக்களுடன் அமர்ந்து, அயோத்தியில் நடைபெறும் நிகழ்வை நேரடியாக காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை என்பதால், அதனை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது சமூகவலைதளத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கண்டனத்தினை பதிவு செய்தார். அதில் அவர், “தமிழக அரசின் காவல்துறையின் அடக்குமுறை தொடர்கின்றது. மேலும் தமிழக அரசு பொதுமக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் இந்துக்களின் நடைமுறைக்கு எதிராகவும் செயல்படுகிறது. எல்இடி திரை வியாபாரிகளின் வயிற்றிலேயே அடிக்கிறது; இந்து விரோத திமுக அரசு தற்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது.” என்று கூறியிருந்தார்.
இந்தப் பிரச்னை பூதாகாரமான நிலையில் இதுகுறித்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாஜகவின் ஆன்மிக பேரவையின் மூலமாக எழுத்துப்பூர்வமான கடிதம் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. அதில் பஜனை நிகழ்ச்சியின் போது எந்த ஒரு காணொளி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம். எந்தவித விளம்பர பதாகைகள் வைக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பான எழுத்துப்பூர்வ கடிதமும் வெளியிடப்பட்டு, உண்மை விளக்கப்பட்டது.
அந்தக் கடிதம்:
காவல்துறை விளக்கத்தினை தொடர்ந்து, “எல்.இ.டி. திரைகளை அப்புறப்படுத்த வேண்டாம். அனுமதி சற்றுநேரத்தில் கிடைத்துவிடும்” என்றுகூறி மீண்டும் காவல்துறையை நாடினர் சம்பந்தப்பட்ட குழுவினர். பாஜகவினரும் இதுதொடர்பாக கோரிக்கை வைத்துவந்தனர்.
அதன்படி தற்போது எல்.இ.டி. திரைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிர்மலா சீதாராமன் நிகழ்வை கண்டு ரசிக்க தயாராகி வருகிறார். முன்னதாக பஜனை நிகழ்விலும் கலந்துகொண்டார் அவர்.
இருப்பினும் முதலில் அனுமதி மறுத்தபோது பேசிய நிர்மலா சீதாராமன், “இந்து மக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது. ஆன்மிகத்திற்கு முக்கியமான இடம் காஞ்சிபுரம். இங்கு மக்களின் உரிமையை பறிக்கிறது திமுக. அயோத்தியாவில் நடக்கும் நிகழ்வை நானும், இந்து மக்களும் பார்ப்பதை, பார்க்கும் எங்கள் உரிமையை தடுக்கிறது இந்த அரசு” என்று கடுமையாக கூறியிருந்தார்.