தமிழ்நாடு

நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

Rasus

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பணியிடை மாற்ற முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதற்கிடையில் தஹில் ரமாணி தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி அது இன்னும் ஏற்கப்படாத நிலையில் அவர் இன்று வழக்குகளை விசாரிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது ‌ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள ‌வழக்குகளின் பட்டியலை பதிவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், தலைமை நீதிபதி தஹில் ரமாணியும், நீதிபதி துரைசாமியும் முதல் அமர்வில் வழக்குகளை விசாரிப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் ராஜினாமா ஏற்கப்ப‌டவில்லை என்றாலும், ராஜினாமா கடிதம் அனுப்பியவர் எவ்வாறு வழக்குகளை விசாரிப்பார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே தலைமை நீதிபதி தஹில் ரமாணி பணியிட மாற்றம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ராஜினாமா முடிவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்ள கூடாது எனக் கோரிக்கை விடுத்தும் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.

கொலிஜியம் தனது முடிவினை மறுபரிசீலனை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்ற ‌வளாகத்தில் ஆவின் நிலையம் அருகே பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர பொதுக்குழு கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.