தமிழ்நாடு

’பெண்ணாக அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல’: ஜெ.பற்றி கனிமொழி!

’பெண்ணாக அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல’: ஜெ.பற்றி கனிமொழி!

webteam

’ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல’ என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி, திமுக மகளிரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. 75 நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி அவர் காலமானார்.

ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்துகின்றனர். அண்ணா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுகவினர் அமைதி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். டிடிவி தினகரனின் அமமுக சார்பிலும் ஊர்வலம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திமுக மகளிரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, ’ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல’ என்று ஜெயலலிதா பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் அவர், ‘’ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது’ என்று தெரிவித்துள்ளார்.