'சின்னக் கலைவாணர்' என்ற அழியாப் புகழுடன் தமிழ்த் திரையுலகில் தடம்பதித்த மறைந்த நடிகர் விவேக்கின் உடல், காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சென்னை - விருகம்பாக்கத்திலிருந்து அவரது உடல் சாலை வழியாக எடுத்துச் செல்லப்படும்போது வழியெங்கும் மக்கள் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இறுதி ஊர்வலத்தில் சிலர் மரக்கன்றுகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், 72 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்க, தமிழக காவல்துறை இறுதி மரியாதை செலுத்தினர்.
அதன்பின், இறுதிச் சடங்கு முடிந்தவுடன், மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணி அளவில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விவேக் அனுமதிமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதிகாலை 4.35 மணிக்கு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 59. அவர் தனது மனைவி, நான்கு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார்.
விருகம்பாக்கம் இல்லத்தில் இன்று காலை தொடங்கி நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரும் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பலரும் உணர்வுபூர்வமாக கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, நடிகர் விவேக்கிற்கு அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. 'தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றவர், தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் நடிகர் விவேக். விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூகச் சேவையை கவுரவிக்கும் வகையில் காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என்று அரசு கூறியிருந்தது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி அவசியம் ஆகும். அதன்படி, முறையான அனுமதியும் கிடைத்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961-ல் பிறந்தவர் நடிகர் விவேக். சென்னைக்கு வந்து தலைமைச் செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில்தான், Madras Humour club-ல் அவர் செய்த காமெடி நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. அதன் வழியான தொடர்புகளே, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் அறிமுகத்தையும் பெற்றுத்தர, பின்னர் அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் விவேக். அதன்பிறகு அவருக்கு 1987-ல் மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடிக்கவும் வாய்ப்புக் கொடுத்தார் பாலச்சந்தர். அதன்பிறகு சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த விவேக், உழைப்பாளி, வீரா போன்ற படங்களால் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகராகவும் ஆனார்.
ஒரு நடிகராக விவேக்கிற்கு தனி அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம் 'காதல் மன்னன்'. அதன்பிறகு, அவர் நடித்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதனால், 2000 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் மட்டுமே சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் விவேக். அஜித் உடன் வாலி, விஜய் உடன் குஷி என முன்னணி நடிகர்களின் படங்களின் வரத் தொடங்கிய விவேக், தன் காமெடியில் கருத்தையும் முன்வைக்கத் தொடங்கினார். அதற்கு ரசிகர்களிடத்தில் கிடைத்த வரவேற்பே, சின்னக் கலைவாணர் என அவர் அழைக்கப்படவும் காரணமானது.
அந்நியன், சிவாஜி என தமிழ் சினிமாவின் பிரமாண்ட படைப்புகளிலும் காமெடியனாக கலக்கிய விவேக்கின் திரை வாழ்க்கையில் 'படிக்காதவன்' திரைப்படம் மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படத்தில் Don-ஆக வரும் அவரது காமெடி எப்போது பார்த்தாலும் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். காமெடி நடிகராக மட்டும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் விவேக் முத்திரை பதித்திருக்கிறார். அதேபோல், கதையின் நாயகனாகவும் வெள்ளைப் பூக்கள் உள்ளிட்ட படங்களில் விவேக்கின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டிருக்கிறது.
திரைத்துறையின் விவேக்கின் பங்களிப்பை போற்றும் வகையில், 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறையும், பிலிம்பேர் விருதை 3 முறையும் பெற்றிருக்கிறார் விவேக்.
தொடர்புடைய செய்திகள்: