போலி ஆவணங்கள் மூலம் 100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சிபிசிஐடி வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம் காட்டியது. அதே சமயம் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் சார் பதிவாளரை மிரட்டிய வழக்கில் பிரவீன் என்பவரும் கைது செய்யப்பட்டார். கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மட்டுமன்றி இன்று காலை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் என்பவரும், இக்குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததாக கைதாகியிருக்கிறார்.