உத்தரப் பிரதேச மாநிலம் சித்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மிக சிறப்பு சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதில் பயணித்த பயணிகள் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர். 8-க்கும் மேற்பட்டோர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ரயில்பெட்டி தீப்பிடித்து மளமளவென எரிந்தபோது, அடுத்த பாதையில் மற்றொரு ரயிலானது தீ பற்றி எரிந்து கொண்டிருந்த ரயில்பெட்டியை கடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒரு பிட்லைனில் ரயில் பெட்டி எரிந்து கொண்டிருந்தபோது மற்றொரு பிட்லைனில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் எடுத்துச் செல்லப்பட்டது என்றும், தீ விபத்து நடைபெற்றபோது அங்கிருந்த ரயிலை உடனடியாக வேறு பிளாட்பாரத்திற்கு மாற்றியதாகவும், அது காலி ரயில் தான் எனவும் தெரிவித்தனர். இருப்பினும் ரயில்வேயின் இந்த அலட்சியப்போக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.