தமிழ்நாடு

”முதல்வர் வேட்பாளரை ஏற்காவிடில் பாஜக தனித்துதான் போட்டியிட வேண்டும்” - அதிமுக பதிலடி

”முதல்வர் வேட்பாளரை ஏற்காவிடில் பாஜக தனித்துதான் போட்டியிட வேண்டும்” - அதிமுக பதிலடி

webteam

யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என தமிழக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியது சர்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கருத்து குறித்து இரு கட்சி தலைவர்கள் கூறிய கருத்துக்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன், “யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். முதல்வர் அதிமுகவினராக இருப்பினும் அந்த அறிவிப்பை பாஜக தலைமைதான் அறிவிக்கும்" என கூறினார். இருப்பினும் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறினார். எல்.முருகன் பேசிய இந்தக் கருத்துகள் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக, பாஜக கட்சிகளை சேர்ந்தவர்கள் அதுகுறித்து பேசியுள்ளனர்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறும் போது, “ கூட்டணி தொடரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கூறிய கருத்து ஏற்கத்தக்கதல்ல. அதிமுக முதல்வர் வேட்பாளரை முன்னரே அறிவித்து விட்டது. 1977 ஆம் ஆண்டு முதல் நடந்த 10 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவே பெரும்பான்மையுடன் 7 முறை வெற்றிபெற்றது” என்றார்.

முன்னாள் அதிமுக எம்.பி அன்வர் ராஜா கூறும் போது, “ முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக முன்னரே அறிவித்துவிட்டது. பாஜக எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்றால், எங்கள் முதல்வர் வேட்பாளரை அவர்கள் ஏற்க வேண்டும். அப்படி யில்லை என்றால் அவர்கள் எங்களுடன் கூட்டணியில் தொடர இயலாது. பாஜக தனித்துதான் போட்டியிட வேண்டும். எல்.முருகன் கூறியது அவரது கருத்து. அவருக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது. அவர் தற்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.” என்றார்.

தமிழக பாஜக பொது செயலாளர் சீனி வாசன் கூறும் போது, “ தேர்தல் கூட்டணி தொடர்வதாக அதிமுகவினர் கூறினர். ஆனால் அது குறித்த பாஜக நிலைப்பாட்டை பாஜக தலைமையே முடிவு செய்யும். அந்த வகையில் மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியது சரியானது” என்றார்.