தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திப்புராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் - மகாலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு ஐந்து மகள்கள் உள்ள நிலையில், இருவருக்கு திருமணம் முடிந்துள்ளது. மூன்று பேர் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், குடும்ப வறுமை காரணமாக மகாலட்சுமி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குவைத்தில் வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரவிச்சந்திரன் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து குவைத்தில் பணியாற்றும் அவரது மனைவி மகாலட்சுமிக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் வேலை பார்க்கும் இடத்தில் உயிரிழந்த கணவரின் உடலை பார்க்க ஊருக்குச் செல்ல வேண்டுமென விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், அவரை ஊருக்கு அனுப்ப மறுத்துள்ளனர்.
இதுகுறித்து மகாலட்சுமி தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததோடு தன்னை தமிழகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு கதறி அழுதுள்ளார். அதன் பேரில் நேற்று அவரது உறவினர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். இதற்கிடையே தனது கணவரின் முகத்தை கடைசியாக பார்க்க வேண்டும் என்றும் அதற்கு உதவி செய்யுமாறும் கோரி மகாலட்சுமி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் குவைத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை தொடர்பு கொண்டு, மகாலட்சுமியை தமிழகத்திற்கு அழைத்துவர ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்தார். அதன்படி இன்று இரவோ அல்லது நாளையோ அவர் தமிழகம் வருவார் என எதிர்பார்ப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.