தமிழ்நாடு

சர்ச்சைக்குரிய பேச்சு - திமுக சைதை சாகித் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார்!

சர்ச்சைக்குரிய பேச்சு - திமுக சைதை சாகித் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார்!

webteam

பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக நிர்வாகி சைதை சாகித் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார் அளித்துள்ளார்.

பாஜக பெண் நிர்வாகிகள் மீது திமுக பிரமுகர் சைதை சாகித் கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணையர் ரேகா சர்மா புகார் மனு ஒன்றை அளித்தார். இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணைய அலுவலகத்தில் ஆணையர் ரேகா சர்மாவை நேரில் சந்தித்து சைதை சாகித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவை அளித்துள்ளார் குஷ்பு.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் குஷ்பு கூறுகையில், “நிகழ்ச்சி ஒன்றில் திமுக பிரமுகர் பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகிகளை அவதூறாக பேசும் பொழுது மேடையில் அமைச்சரும் இருந்தார். ஆனால் அப்போது அவர் அதை தட்டிக் கேட்கவில்லை, நான்கு நாட்கள் தூங்கி எழுந்த பிறகுதான் சம்பந்தப்பட்ட நிர்வாகியை தனியாக அழைத்து திட்டியதாக தெரிவித்தார்.

பொதுமக்கள் கூடியிருக்கும் ஒரு கூட்டத்தில் அனைவரின் முன்னாலும் அவதூறாக பேசியதை ரசித்து கேட்டு விட்டு, தனிமையில் கூப்பிட்டு திட்டியதாக தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் தான் விளம்பரத்தை விரும்புகிறேன் என என் மீது குற்றச்சாட்டு வைக்கும்போது, இது போன்ற ஆண்களின் மனநிலை மற்றும் வளர்ப்பு எப்படி இருக்கு என்பதை நான் நிச்சயம் அறிவேன்.

நல்ல சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் பெண்களை தவறாக பேச மாட்டார்கள், பேசுவதை கேட்டு ரசித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையர் ரேகா சர்மாவிடம் புகார் மனு அளித்துள்ளேன்” என்றார்.

குஷ்பு விவகாரத்தில் பேசிய தேசிய மகளிர் ஆணையர் ரேகா, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திமுக பிரமுகர் சைதை சாதிக் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டிருந்த நிலையில், சைதை சாகித் இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்படும் என்றார்.