தமிழ்நாடு

முதல்வரிடம் விருது பெற்றதற்கு விருந்து வைத்த பெண் தாசில்தார்: கலெக்டரின் அதிரடி நடவடிக்கை

webteam

கொரோனா தடுப்பு பணிக்கு முதல்வரிடம் விருது வாங்கிய குன்றத்தூர் தாசில்தார், பலரை கூட்டி பிரியாணி விருந்து வைத்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குன்றத்தூர் புதிய தாலுக்காவாக பிரிக்கப்பட்டு குன்றத்தூரில் புதிய தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் ஜெயசித்ரா. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதலமைச்சரின் கையால் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வரின் சிறப்பு விருதை பெற்றார்.

இதைத்தொடர்ந்து விருது பெற்றதை கொண்டாடும் விதமாக செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விடுதியில் சக ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து எற்பாடு செய்திருந்தார். இதில் குன்றத்தூர் வட்டத்தில் பணியாற்றக்கூடிய துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் இது போன்று எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் விழா நடத்தியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக விருது பெற்ற வட்டாட்சியர் இது போன்ற செயலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி வட்டாட்சியர் ஜெயசித்ராவை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

குன்றத்தூர் வட்டாட்சியர் ஜெயசித்திரா கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.