குன்றத்தூரில் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமி இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
சென்னை அருகேயுள்ள குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தத் தம்பதிக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். விஜய் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே அபிராமிக்கு சுந்தரம் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது. இதனால் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து தப்பியோடிய அபிராமி நாகர்கோவில் மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தகாத உறவுக்காக குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதன்பின்னர் சுந்தரத்தையும் கைது செய்த காவல்துறையினர், இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையிலிருந்த அபிராமியை காஞ்சிபுரம் நடுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது கூடியிருந்த மக்கள் அபிராமியை வேடிக்கை பார்த்தனர். அத்துடன் குழந்தையை கொன்றவர் என்றும் முனுமுனுத்தனர். பின்னர் அபிராமி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, அவருக்காக வாதாட எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இதனால் வழக்கை ஜனவரி 2ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.