தமிழ்நாடு

மிரட்டும் காட்டு யானை சங்கரை பிடிக்கும் பணியில் கும்கி சீனிவாசன்! சுவாரஸ்ய ப்ளாஷ் பேக்

மிரட்டும் காட்டு யானை சங்கரை பிடிக்கும் பணியில் கும்கி சீனிவாசன்! சுவாரஸ்ய ப்ளாஷ் பேக்

sharpana

கடந்த 2016 ஆம் ஆண்டு தான் பிடிக்கப்பட்ட அதே பகுதிக்கு மற்றொரு காட்டு யானையான சங்கரை பிடிக்க வந்துள்ள கும்கி யானை சீனிவாசன் .

சேரம்பாடி பகுதியில் மூன்று பேரைக் கொன்ற காட்டு யானை சங்கரை பிடிக்கும் பணி 2வது முறையாக தொடங்கப்பட்டு 5 நாட்களாக நடந்து வருகிறது. யானையை பிடிக்கும் பணிக்காக முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள் மற்றும் டாப்சிலிப்பில் இருந்து 1 கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதுமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கும்கி யானை பொம்மனுக்கு கால் பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அதனை யானை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்த முடியாது என யானை பாகன்கள் தெரிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் பொம்மன் யானைக்கு மாற்றாக நேற்று மாலை ஸ்ரீனிவாசன் என பெயரிடப்பட்டுள்ள மற்றொரு கும்கி யானை முதுமலையில் இருந்து சேரம்பாடி பகுதிக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறது.

சீனிவாசன் யானை கடந்த 2016ஆம் ஆண்டு தற்போது சங்கரை பிடிக்கும் பணிகள் நடந்து வரும் அதே பகுதியில் பிடிக்கப்பட்டது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் தற்போது கும்கியாக உருமாறி சேரம்பாடி வந்துள்ள சீனிவாசன் 2016-ம் ஆண்டு வரை தற்போது சங்கர் யானை சுற்றிவரும் அதே யானை கூட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்டது தான். தான் ஏற்கனவே பிடிக்கப்பட்ட பகுதிக்கு தற்போது கும்கியாக மாறி மற்றொரு காட்டு யானையான சங்கரை பிடிக்க சீனிவாசன் சேரம்பாடி கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்பொரு காலத்தில் காட்டு யானையாக இருந்த போது தான் சுற்றிவந்த சேரம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கும்கி யானையாக மறு உருவெடுத்து யானை பிடிக்கும் பணிக்காக கொண்டு வரப்பட்டிருக்கிறது. முதன்முறையாக காட்டு யானையை பிடிக்கும் பணிக்காக ஸ்ரீனிவாசன் யானை முகாமை விட்டு வெளியே அழைத்து வர பட்டிருக்கிறது. சங்கர் யானையை பிடிக்கும் பணியில் இந்த யானை எவ்வாறு செயல்பட போகிறது என காண வனத்துறையினர் ஆர்வமாக உள்ளனர்.

 கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்ரீனிவாசன் மற்றும் தற்போது பிடிக்கப்பட்டுள்ள சங்கர் யானையும் பிடிக்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்தவை. 2016ஆம் ஆண்டு சங்கர் யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் அனைத்து பணிகளையும் மேற்கொண்ட நிலையில் கடைசி நேரத்தில் அந்த முயற்சியைக் கைவிட்டனர். அப்போது சங்கர் யானையுடன் கும்கி யானையான ஸ்ரீனிவாசனும் இருந்தது குறிப்பிடத்தக்கது.