தமிழ்நாடு

தமிழ் முறைப்படி ஜப்பானிய பெண்ணை மணந்த இளைஞர்

தமிழ் முறைப்படி ஜப்பானிய பெண்ணை மணந்த இளைஞர்

Rasus

கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் ஜப்பானிய இளம்பெண்ணுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு வந்திருந்த மணமகளின் உறவினர்கள் தமிழ்க் கலாச்சாரப்படி வேட்டி, புடவை அணிந்து மணமக்களை வாழ்த்தினர்.

கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த வசந்தன் கடந்த 7 ஆண்டுகளாக ஜப்பானில் ஆராய்ச்சி கல்வியை முடித்து அங்கேயே பணி புரிகிறார்.  வசந்தனுக்கு முகநூல் மூலம் அறிமுகமானார் மேகுமி. ஜப்பானை சேர்ந்த இவர் அங்கேயே வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அறிமுகம் நாளடைவில் காதலாக மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்வதாய் முடிவெடுத்தனர். இருவரது பெற்றோருடைய சம்மதத்தையும் பெற்ற வசந்தனுக்கும், மேகுமிக்கும் கும்பகோணத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று தமிழ்க் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.

மணப்பெண்ணின் பெற்றோர் வர இயலாததால் மணமகனின் தாய் மாமன், பெண்ணின் பெற்றோராக இருந்து சடங்குகளை செய்தார். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து காலில் மெட்டி அணிவித்து பெற்றோர் ஆசீர்வாதத்துடன் அச்சதை தூவ ஜப்பானிய பெண்ணுடன் இல்வாழ்க்கையில் கரம் கோர்த்தார் வசந்தன். இத்திருமணத்திற்கு வந்திருந்த மணமகளின் தங்கை, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ்க் கலாச்சாரப்படி வேட்டி, புடவை அணிந்து மணமக்களை வாழ்த்தினர். திருமண வைபவ காட்சிகள் அனைத்தையும் இணையம் மூலமாக ஜப்பானில் இருந்தபடியே மணப்பெண்ணின் பெற்றோர் கண்டு ஆசீர்வதித்தனர்.