Tower wall collapsed pt desk
தமிழ்நாடு

கும்பகோணம்: திடீரென இடிந்து விழுந்த மகாமக குளத்தின் கோபுர சுற்றுச்சுவர் - பக்தர்கள் அதிர்ச்சி

கும்பகோணம் மகாமக குளத்தின் சோடசலிங்க கோபுர சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

webteam

செய்தியாளர்: விவேக்ராஜ்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோவில் நகரமாக விளங்கி வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமக திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த மகாமக குளத்தைச் சுற்றிலும் 16 சோடசலிங்க மண்டபங்கள் அமைந்துள்ளன. மாசி மகம், அமாவாசை போன்ற நாட்களில் மகாமக குளத்தில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து குளத்தில் புனித நீராடுவது வழக்கம்.

Tower wall collapsed

இந்நிலையில், நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் மகாமகம் குளத்தின் கரையில் ஏராளமான பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, குளத்தில் புனித நீராடினர். அப்போது மகாமகம் குளத்தின் கிழக்கு மற்றும் தெற்கு கரையில் உள்ள வியாசேஸ்வரர், தினேச்சுவரர், பைரவேஸ்வரர் ஆகிய மூன்று சோடசலிங்க மண்டபங்களின் கோபுர சுற்றுச்சுவர் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளன. தர்ப்பணம் முடிந்து புரோகிதர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமின்றி தப்பினர்.

மகாமக குளத்தின், சோடசலிங்க மண்டப சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜன் நம்மிடையே கூறும்போது... “இன்று காலை மகாமகம் குளத்திற்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக வந்த போது, திடீரென சோடசலிங்க மண்டபத்தின் மேல் சுவர் இடிந்து விழுந்தது.

Temple

இதேபோல் குளத்தைச் சுற்றியுள்ள சோடசலிங்க மண்டபங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. இது பக்தர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சோடசலிங்க மண்டபங்களை சீரமைக்க வேண்டும்” என்றார்.