தமிழ்நாடு

விமர்சையாக நடந்துமுடிந்த குன்றத்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா

விமர்சையாக நடந்துமுடிந்த குன்றத்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா

நிவேதா ஜெகராஜா

சென்னையை அடுத்த குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது.

குடமுழுக்கு விழாவில், அமைச்சர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்து நடத்தி வைத்தனர். குன்றத்தூர் குன்றின் மீது அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் திருக்குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே ரூ.2 கோடி மதிப்பீட்டில் குன்றத்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயில் கோபுரங்கள், கட்டடங்கள், தரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் புதுப்பித்து வர்ணம் பூசும் பணி முழுமை அடைந்த நிலையில் கடந்த கடந்த 20ஆம் தேதி கணபதி ஹோமம், கஜ பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சிவஞான பாலய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன் புனித நீரானது எடுத்து வரப்பட்டு கோயிலின் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. கோயில் மிகவும் பழமையான கட்டடம் என்பதால் கோயில் கோபுரத்தின் மீது 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த விழாவில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சேகர்பாபு, தாம்பரம் போலீஸ் கமிசனர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூக்கள் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. புனித நீர் பக்தர்கள் ஸ்பிரே என்னும் கருவி மூலம் தெளிக்கப்பட்டது. மேலும் கோயிலுக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே அன்னதானமும் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்கள் தப்பிபதற்காக கோயில் படிக்கட்டுகளில் சிவப்பு நிற கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்ததோடு ஆங்காங்கே குடிநீர் கேன்களும் வைக்கப்பட்டு இருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட நிலையில் கோயில் படிக்கட்டு வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவை காண அனுமதிக்கப்பட்டனர். ஆங்காங்கே பெரிய அளவில் எல்இடி திரை வைத்து கும்பாபிஷேக விழா ஒளிபரப்பப்பட்டது.