தமிழ்நாடு

குமரி: தொடர் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் - பொதுமக்கள் பாதிப்பு

குமரி: தொடர் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் - பொதுமக்கள் பாதிப்பு

kaleelrahman

குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் மழை குறைந்திருந்தாலும் மலையோர பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய மூன்று அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றி வருவதால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் புகுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாகர்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போல் மலையோர பகுதிகளான கோதையார் சுற்றுவட்டார பகுதிகளிலும். குழித்துறை தக்கலை, குலசேகரம், முஞ்சிறை, கொல்லங்கோடு உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மிக கனமழை பெய்தது.

இந்த மழை காரணமாக மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளான களியல் திக்குறிச்சி, ஞாறன்விளை, குழித்துறை, சென்னித்தோட்டம், மாங்காடு, முஞ்சிறை காஞ்சாபுறம் உட்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், செங்கல் சூளைகள் மற்றும் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் மாவட்டத்தின் முக்கிய அணைகளான 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு, மலையோர பகுதிகளில் பெய்த மழையால் வரும் தண்ணீர் மற்றும் கோதையார் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் சேர்த்து அணைக்கு வினாடிக்கு 20,000 கன அடி நீர்வரத்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 44 அடியை தாண்டியதால் அணையில் இருந்து வினாடிக்கு 11,000 கன அடி தண்ணீர் நேற்று முன்தினம் வெளியேற்ற துவங்கியது.

இதுபோல் 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் அணையின் நீர்மட்டம் 16 அடியை தாண்டியதால் அந்த அணையில் இருந்து நேற்று முதல் வினாடிக்கு 794 கன அடி உபரிநீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இந்த இரு அணைகளில் இருந்தும் வெளியேறும் உபரிநீர் கோதையாறு வழியாக பாய்ந்து திற்பரப்பு அருவி வழியாக தாமிரபரணி ஆற்றில் கலந்து திக்குறிச்சி, ஞாறன்விளை, குழித்துறை, மங்காடு, முஞ்சிறை வழியாக தேங்காப்பட்டணம் கடலில் கலக்கிறது.

இந்த தாமிரபரணி ஆறு செல்லக்குடிய மூவாற்றுமுகம், சிதறால், திக்குறிச்சி, ஞாறன்விளை, குழித்துறை, மங்காடு, முஞ்சிறை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் திக்குறிச்சி, முஞ்சிறை, மங்காடு, காஞ்சாம்புறம் போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து அந்த பகுதி மக்கள் தண்ணீரில் தவித்து வருகின்றனர். இதுபோல் இந்த பகுதிகளில் உள்ள பல சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி சாலைகளும் துண்டிக்கப்பட்டது.

இந்த பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறையினர், பள்ளிகளையும் சமூக நலக்கூடங்களையும் தயார்செய்து தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் மழை குறைந்ததாலும் கோதையார் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வெளியேற்றம் செய்த தண்ணீரை நிறுத்தியதாலும் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 8000 கன அடியாக குறைந்தது. இதனால் இந்த அணையில் இருந்து வெளியேற்றம் செய்துவந்த உபரி நீரின் அளவை 7000 மாக குறைத்தது.

இதன் காரணமாக பரளியாற்றின் தாழ்வான பகுதிகளான அருவிக்கரை, மாத்தூர், திருவட்டார் தேமானூர், மூவாற்றுமுகம் போன்ற பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அணையில் இருந்து வெளியேற்றம் செய்த 5000 கன அடி உபரிநீர் மூவாற்றுமுகம் பகுதியில், தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் தாமிரபரணி ஆறு செல்லும் சிதறால் திக்குறிச்சி, ஞாறான்விளை, குழித்துறை, மங்காடு, முஞ்சிறை, காஞ்சாபுறம் போன்ற பகுதிகளில் மீண்டும் தண்ணீரால் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் காவல்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தொடர் மழையால் திக்குறிச்சி, திருவட்டார், ஞாறன்விளை போன்ற பகுதிகளில் செயல்பட்டுவரும் 30-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் பாதிக்கப்பட்டுள்ளது.