Police suspended pt desk
தமிழ்நாடு

குமரி: சோதனை சாவடியில் லஞ்சம் - வீடியோ வைரலான நிலையில் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

webteam

செய்தியாளர்: நவ்பல் அஹமது

கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்திற்கு, நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக நூற்றுக்கணக்கான டார்ஸ் லாரிகளில் பாறை கற்கள் ஏற்றிச் செல்லப்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி வருகிறது இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

SP Office

இந்நிலையில், கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் குமரி மாவட்டத்திற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு நீர்நிலைகள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கொட்டி விட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது, இதையடுத்து ஆரல்வாய்மொழி பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாறிகள் மற்றும் சட்டவிரோதமாக இறைச்சி கழிவுகள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் பணியாற்றும் போலீசார் லஞ்சம் வாங்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வைரலான வீடியோவின் அடிப்படையில், ஆரல்வாய்மொழி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ, மற்றும் இரணியல் காவல்நிலைய ஏட்டு தர்மராஜ் மற்றும் ஆசாரிப்பள்ளம் காவல்நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பேச்சிநாத பிள்ளை ஆகிய மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டார்.