தமிழ்நாடு

“அமைதி வழியில் போராடியவர்கள் மீது பொய் வழக்கு” - தூத்துக்குடி மக்கள் மனு

“அமைதி வழியில் போராடியவர்கள் மீது பொய் வழக்கு” - தூத்துக்குடி மக்கள் மனு

rajakannan

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதி வழியில் போராடியவர்களை விடுவிக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் குமரெட்டியாபுரம் மக்கள் மனு அளித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், வடபாகம் மற்றும் சிப்காட் காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும் பதியப்பட்டு இருந்தன. 

இதனையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தன்னுடைய விசாரணையை தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் குமரெட்டியாபுரம் மக்கள் மனு ஒன்றினை அளித்துள்ளனர். அதில், தங்கள் பகுதியைச் ‌சேர்ந்த மகேஷ், பால்ராஜ் ஆகியோர் எவ்வித வன்முறையில் ஈடுபடுபடாதபோதிலும், சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் மீ‌து பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். வன்முறைக்கு சிறிதும் தொடர்பில்லாத பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற்று, அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர். 

இ‌தனிடையே தூத்துக்குடி கலவரத்தில் தொடர்பில்லாத யாரும் சட்டவிரோதமாகக் கைது செய்யப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம் அளித்துள்ளார்.