தமிழ்நாடு

ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசையில் ஏவுகணை தளம் அமைந்தால் இவ்வளவு நன்மைகளா!

ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசையில் ஏவுகணை தளம் அமைந்தால் இவ்வளவு நன்மைகளா!

webteam

ராக்கெட் ஏவுவதற்கு மிக பொருத்தமான இடம் இந்த குலசேகரப்பட்டினம். நிலம்  ஆர்ஜிதம் முடிந்தது, அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என குலசேகர பட்டினத்தில் ஆய்வு மேற்கொண்ட இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.  

இஸ்ரோவின் பிரதான ராக்கெட் ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ளது. ஆனாலும், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுவதற்கான தளம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்திரா காந்தியின் காலத்திலிருந்தே விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் குலசேகரப்பட்டினம் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்படும் போது அது இலங்கை நாட்டின் மீது பறக்காமல் நேரடியாக விண்ணுக்கு செல்லும். ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டை செலுத்தும் போது அது தென்கிழக்கு திசையில் சென்று இலங்கை நாட்டின் மீது வரை தாக்கமிருக்கும். வெளிநாட்டு எல்லைகளில் ராக்கெட் பயண தாக்கம் இருக்கக் கூடாது என சர்வதேச சட்டங்கள் உள்ளது.

குலசேகரப்பட்டினத்தில் இருந்து விண்ணுக்கு ராக்கெட்  ஏவப்படும் போது தெற்கு திசை நோக்கி நேராக விண்ணுக்கு செல்வதால் வேறு பிரச்சனை இருக்காது. மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 13 டிகிரி கோணத்தில் தென்கிழக்கு நோக்கி சில சிரமங்களுக்கிடையே சில கட்டுப்பாடுகளோடு வானோக்கி செலுத்த வேண்டும் ஆனால் குலசேகரப்பட்டினத்திலிருந்து 8 டிகிரி கோணத்தில் சிக்கல் ஏதும் இன்றி வானத்தில் எளிதாக பறக்கும். அதேபோல் ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் 97 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகேந்திர கிரியிலிருந்து கிடைக்கும். ஆனால் 1,479 கிலோ மீட்டர் உள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு எரிபொருள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் குலசேகரபட்டினம் ஏவுதளத்திற்கு ஆயிரம் கிலோ மீட்டர் பயண செலவு குறைகிறது.

இப்படி பல்வேறு வகைகளில் லாபம் தரக்கூடிய இந்த குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, திட்டத்திற்கு தேவையான 2,300 ஏக்கர் நிலம் பள்ளக்குறிச்சி, மாதவகுறிச்சி, படுக்கப்பத்து என திருச்செந்தூர் வட்டார கிராமங்களில் நிலங்களை எடுக்கும் பணி தூத்துக்குடி மாவட்டம் நிர்வாகம் சார்பில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று இஸ்ரோ தலைவர் சோமநாத் குலசேகரப்பட்டினம் அருகே உள்ள கூடல்நகர் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவருடன் மூத்த விஞ்ஞானிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வந்திருந்தனர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அதிகாரிகள் இந்த ஆய்வில் உடன் இருந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த ஆய்வு முடித்து புறப்பட்ட இஸ்ரோ தலைவர் சோமநாத் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது கூறியதாவது:- ''ராக்கெட் ஏவுவதற்கு மிக பொருத்தமான இடம் இந்த குலசேகரப்பட்டினம். திட்டத்திற்கான நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் முடிவு பெற்றுள்ளது. ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான ஒப்புதல் அரசிடமிருந்து பெற வேண்டி உள்ளது.  கிடைத்தவுடன் உடனடியாக கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆனால் குலசேகரப்பட்டினம் 2 கிலோமீட்டர் தொலைவில் மக்கள் வாழும் குடியிருப்புகள் இருப்பதால் SSLV போன்ற சிறிய அளவிலான ராக்கெட்டுகள்  இங்கிருந்து ஏவப்படும். இறுதியாக SSLV ஏவப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் மாதம் அடுத்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும்'' என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.