குலசேகரப்பட்டினம் pt web
தமிழ்நாடு

12 லட்சம் பேர்! மக்கள் வெள்ளத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட உலகப் புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா!

உலகப் பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

PT WEB

உலகப் பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது. மாலை அணிவித்து விரதம் இருந்த பக்தர்கள், நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து கோயிலுக்கு வந்து வழிபட்டனர்.

Kulasai dasara festival

வித விதமான வேடங்கள்... விண்ணைப் பிளந்த மேளங்கள்... திரும்பிய திசையெங்கும் பக்தர்கள்... வழிநெடுகிலும் தசரா குழுக்கள்... இப்படியாக குலுங்கியது குலசேகரன்பட்டினம்.

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் 10 நாட்கள் தசரா பண்டிகை வெகுவிமரிசையாக நடைபெறும். தமிழகம் முழுவதும் இருந்து மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனுக்காக காப்பு கட்டி முத்தராம்மனை வேண்டி, மாலை அணிவித்து விரதம் இருந்து, காளி, அம்மன், அனுமன், கிருஷ்ணர், குரங்கு, கரடி என பல்வேறு வேடங்களை அணிந்து கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர்.

கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு, நள்ளிரவு 12 மணியளவில் கடற்கரை மைதானத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பாக அம்மன் எழுந்தருளினார்.

முதலில் தன்முகமாக வந்த மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன், அடுத்ததாக யானை முகத்துடனும், எருது முகத்துடனும் வந்த சூரனை வதம் செய்தார். அடுத்த சேவல் உருவில் வந்த மகிஷாசூரனையும் வதம் செய்த முத்தாரம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

சூரசம்ஹார நிகழ்வில் 12 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை காப்பு அறுத்த பின் பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள். தசரா திருவிழாவையொட்டி குலசேகரன்பட்டினத்தில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முக்கியமான பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.