கூடங்குளம் அணு உலையில் பாதிப்பு ஏற்படுமேயானால் புகுசிமா போல் தென் இந்தியாவும் பாதிக்கப்படலாம் என உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக சுந்தர்ராஜன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகள் சரியாக கையாளாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமலும் இருந்து வருகிறது. மேலும் அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல் கழிவுகள் கடலில் கொட்டப்படுகிறது. அதனால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படும் வரை அணு உலையில் மின் உற்பத்திக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே மத்திய அரசு பதிலளித்திருந்த நிலையில், கூடங்குளம் அணு உலை-1 க்கு 2026 வரையும் அணு உலை-2க்கு 2028ம் ஆண்டு வரையும் தொலைதூர அணுக்கழிவு பாதுகாப்பு கட்டமைப்பு தேவையில்லை எனவும், தற்போது உலை 1 மற்றும் 2 ஆகியவற்றில் உள்ள அணு எரிபொருள் 2026 மற்றும் 2028ம் ஆண்டு வரையில் பயன்படுத்த முடியும். எனவே இந்த காலகட்டத்துக்கு பின்னரே AFR என்னும் தொலைதூர அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு தேவைப்படும் என விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில் இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது ஆலை கழிவுகளை பத்திரமாக சேமிக்க வேண்டும் என கேட்கிறீர்கள், இந்த வழக்கை மிக அவசரமாக விசாரிக்க வேண்டுமா? நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ஆம் இது ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும் ஒட்டுமொத்த கூடங்குளம் அணு உலையையும் மூட வேண்டும் என கேட்கிறீர்கள். அது மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தி விடாதா என நீதிபதி கேட்ட போது, நிச்சயம் ஏற்படுத்தும் தான் ஆனால் இதன் ஆபத்து தென் இந்தியாவிற்கே பெரும் ஆபத்தாக முடியும். புகுசிமா போல் தென் இந்தியாவும் பாதிக்கப்படலாம் என சுந்தரராஜன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளுக்கான தொலைதூர அணுகழிவு சேமிப்பு கிடங்கு கட்டமைக்கக்கோரிய விவகாரத்தில் இதற்கு மேல் கால அவகாசம் கேட்க கூடாது என சொல்லியும் மீண்டும் மீண்டும் மத்திய அரசு கேட்டு வருகிறது, இது வரை 20 முறைக்கும் மேல் அணுமின் நிலையம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இவையெல்லாம் நீண்ட பிரச்சனை என வாதம் முன்வைக்கப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், கூடங்குளம் அணு உலை விவகாரத்தில், பொது மக்களின் கருத்துகளை கேட்டறிந்து அறிக்கையை எப்போது தாக்கல் செய்ய முடியும் என்பதை 2 வாரத்தில் தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவை பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
- நிரஞ்சன்