தமிழ்நாடு

திமுகவுக்கு அனுமதி தரும் அதிமுக அரசு, பாஜகவுக்கு மறுப்பது ஏன்? - கே.டி.ராகவன் கேள்வி

Sinekadhara

திமுக போராட்டம் நடத்த அனுமதி தரும் அதிமுக அரசு, பாஜகவுக்கு அனுமதி மறுப்பது ஏன் என பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேல் யாத்திரைக்கு அதிமுக அரசு தடை விதித்ததைக் குறித்து இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கே.டி. ராகவன் சராமரி கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் பேசிய அவர், “பாஜகவினர் செல்லும் போது ஒவ்வொரு மாவட்ட எல்லைகளிலும் அந்தந்த காவல்துறையினரிடம் அனுமதி வாங்கவேண்டும் ஒவ்வொரு இடங்களிலும் 10 நிமிடங்களுக்கும் மேலாக நிறுத்திவைத்தனர்.

பாஜகவினர் எங்கு சென்றாலும் கைது செய்யப்படுகிறார்கள் என்றால், இதே நடவடிக்கையை அதிமுக அரசு ஏன் திமுக நடத்தும் போராட்டங்களின்மீது எடுப்பதில்லை. பாஜகவை கூட்டணி கட்சி என்று கூறும் அதிமுக ஏன், பாஜகவின் தொண்டர்களை இவ்வாறு நடத்துகிறது. அதிமுக அரசை எதிர்த்து திமுக பேசும் கூட்டங்களுக்கெல்லாம் அனுமதி கொடுத்துவிட்டு, அந்த கூட்டங்களின் மீதெல்லாம் என்ன நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே இருக்கும் புரிதல் என்னவென்ற கேள்வி எழுகிறது.

பாஜகவினர்மீது வழக்குத் தொடரப்பட்டதுமல்லாமல் ஆண்டவனின் வேல் ஏந்தி சென்றதற்கு, ஆயுத தடுப்பு சட்டத்தை பயன்படுத்த தூண்டுவதாக மாநில டிஜிபி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சியை அளிக்கிறது.

ஆனால் ஒன்றுமட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன், டிசம்பர் 6ஆம் தேதி இந்த வேல் யாத்திரையின் நிறைவு விழா திருச்செந்தூரில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதில் எங்களுடைய அகில இந்திய தலைவர் ஜே.பி. நத்தா கலந்துகொள்ள இருக்கிறார் என்பது மட்டும் உறுதி. அதுமட்டுமல்லாமல் வேல் யாத்திரை தொடர்ந்து நடக்கும் எனவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

 அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் நடவடிக்கைகளில் உள்நோக்கம் இருக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உள்நோக்கம் இருக்கிறதாகத்தான் தெரிகிறது என்று கூறியுள்ளார். மேலும் இதனால் தேர்தல் கூட்டணியின் மாற்றங்கள் வருமா என கேட்கப்பட்டதற்கு, அது தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும் என்று கே.டி. ராகவன் கூறியுள்ளார்.