சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட தாமதம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
17 வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கி ரஸ் கட்சிகள் சில தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை.
திமுக தலைமையில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை நள்ளிரவில் அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 10 தொகுதிகளில் சிவகங்கையை தவிர்த்து மற்ற 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. சிவகங்கை தொகுதியை பொருத்தவரையில் முன்னதாகவே தேர்தல் பணிகளை, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடங்கியிருந்தார். ஆனால் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவருக்கு வாய்ப்பளிக்க கட்சி மேலிடம் மறுப்பதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது, அவர் “ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பதவி” என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முடிவெடுத்துள்ளதால் தான் சிவகங்கை தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். மேலும் நாடு முழுவதும் 40 இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு பதவி கேட்டுள்ளனர். எனவே சிவகங்கை போன்று 40 இடங்களில் உள்ள தலைவர்களிடம் ராகுல் இன்று இதுகுறித்து பேச உள்ளார் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
எனவே சிவகங்கை தொகுதியில், கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் அல்லது முன்னாள் எம்.பி, சுதர்சன நாச்சியப்பன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.