தமிழ்நாடு

சாலையை மறித்து நின்ற காட்டு யானைகள் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாலையை மறித்து நின்ற காட்டு யானைகள் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்

kaleelrahman

அஞ்செட்டி அருகே சாலையில் யானைகள் நின்றிருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா வனச்சரகம் குந்துக்கோட்டை காப்புக்காட்டில் கடந்த சில நாட்களாக யானைகள் சுற்றி வருகிறது. இதில், தனியாக பிரிந்த ஒரு குட்டியனை உட்பட நான்கு யானைகள் இரவு நேரத்தில் உணவு தேடி காப்புக்காட்டை விட்டு வெளியேறி தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை சிறிது தூரத்தில் நிறுத்தி வைத்தனர், இந்நிலையில், குட்டியுடன் சேர்ந்து மூன்று யானைகள் வனப்பகுக்குள் சென்ற நிலையில், ஒற்றை யானை மட்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் சலையிலே நின்றபடியே இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

இதைத் தொடர்ந்து ஒரு கார் யானையை கடந்து செல்ல முயன்றபோது ,அந்த காரை யானை பின் தொடர்ந்து சிறிது தூரம் துரத்திச் சென்றது. இதனால், காரில் இருந்த நபர்கள் அச்சம் அடைந்தனர். யானை காரை துரத்தும் காட்சியை காரில் இருந்தவர்கள் தங்களின் கைபேசியில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிதானமாகவும் ,கவனத்துடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறித்தியுள்ளனர்.