ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கணவரை விட்டுச்சென்றுவிடுமாறு மிரட்டியதால் கணவருடன் தன்னை சேர்த்து வைக்ககோரி மனைவி தீக்குளிக்க முயற்சி.
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்வதி. இவரை கடந்த 2016ம் ஆண்டு கிருஷ்ணகிரி அடுத்த திருவள்ளுவர் தெருவில் உள்ள ராஜா என்பவர் திருமணம் செய்துள்ளார். அப்போது ராஜாவிற்கு பெண் வீட்டார் 25 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் பணம் வாங்கி வர வேண்டும் என மனைவி பார்வதியை, கணவர் ராஜாவின் வீட்டார் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் நாளுக்கு நாள் வீட்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜாவின் தாயார் மற்றும் சகோதரி, தாய் வீட்டிற்குச் சென்று ரூ.4 லட்சம் வாங்கி வருமாறு பார்வதியை துன்புறுத்தியுள்ளனர்.
அத்துடன் அந்தப் பெண்ணை வீட்டை விட்டும் வெளியேற்றியுள்ளனர். இதையடுத்து வீட்டிலிருந்து வெளியேறிய பார்வதி, தாய் வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையே ராஜாவிற்கு வேறு திருமணம் செய்ய முடிவெடுத்த குடும்பத்தார், அதற்கான பெண் பார்க்க தொடங்கியுள்ளனர். இந்தத் தகவலை அறிந்த பார்வதி, தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கிருஷ்ணகிரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் கொடுக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பார்வதி தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் பார்வதியை அவரது கணவர் ராஜா தரப்பிலிருந்து பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர்.
பேச்சு வார்த்தைக்கு சென்ற அவரை, பஞ்சாயத்துக்கு அழைத்துச்சென்று ‘ரூ.5 லட்சம் தருகிறோம். அதைப்பெற்றுக்கொண்டு ராஜாவை விட்டுச் சென்றுவிடு. இனிமேல் வராதே’ என மிரட்டியுள்ளனர். கணவர் தரப்பு மிரட்டலால் மனமுடைந்த பார்வதி, நேராக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர், தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.