செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக வனப்பகுதியில் இருந்து அக்டோபர் மாதம் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஓசூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பல குழுக்களாக பிரிந்து தஞ்சமடைந்துள்ளது. மேலும், சில யானைகள் ஒற்றை யானையாக தனியாக பிரிந்து சுற்றி வருகிறது. இதையடுத்து நேற்றிரவு கஸ்பா வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டுயானை அந்நியாளம் கிராமத்தில் சுற்றித் திரிந்துள்ளது.
அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மனைவி வசந்தம்மா (37) என்பவர் இன்று காலை வழக்கம் போல கூலி வேலைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை வசந்தம்மாவை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறை மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், அந்நியாளம் கிராமத்தில் சுற்றித் திரிந்த காட்டு யானை அருகில் உள்ள தாசரப்பள்ளி கிராமத்தின் வழியாக சென்று, அங்கு அஸ்வத்தமா என்ற பெண்ணை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அஸ்வத்தம்மா சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
தொடர்ந்து சென்ற காட்டு யானை வேலூரில் தனியார் ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளி ராம் ஸ்ரீ என்பவரை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து, அந்த காட்டு யானை கும்மலாபுரம் பகுதியாக வழியாக சென்று கொண்டிருந்தபோது இரண்டு பசு மாடுகளை தாக்கியுள்ளது. இதில் இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து உயிரிழந்த வெவ்வேறு கிராமத்தை சேர்ந்த இரு பெண்களின் உறவினர் மற்றும் அந்த கிராம மக்கள் அந்தந்த கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுனர். யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் இதுபோன்ற சம்பவம் நடக்க நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரி சாலை மறியலில் ஈட்டுப்பட்டனர்.
அதேபோல், தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் உள்ள வனச்சரக சோதனை சாவடி பகுதியில் தளி சட்டமன்ற உறுப்பினர் டி.இராமச்சந்திரன் தலைமையில் விவசாய சங்கம் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேன்கனிக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான போலீசார் இரு கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டு மக்கள் கலைந்து சென்றனர்.