செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
ஓசூர் அடுத்த கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் தாலுகா ஜிகனி பகுதியை சேர்ந்தவர்கள் மீனா - யோகேஷ் தம்பதியர். இவர்களது மகள் சந்திரகலா (19) படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் அருண் என்ற இளைஞரும் சந்திரகலாவும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்ததை அடுத்து அருணின் குடும்பத்தினர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சந்திரகலாவின் பெற்றோர் அருண் வீட்டிற்குச் சென்று திருமணம் தொடர்பாக பேசி உள்ளனர். இதை ஏற்க மறுத்த அருண் குடும்பத்தினர், சந்திரகலாவின் பெற்றோரை அவதூறாக பேசி திருப்பி அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து அருண், சந்திரகலாவை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அருண் சிறை சென்றவர் எனவும், அவரது செயல்பாடுகள் சரியில்லை எனவும் சந்திரகலாவுக்கு அவரது பெற்றோர் அறிவுரை கூறியுள்ளனர். இதனால் மனம் மாறிய சந்திரகலாவுக்கும், உறவுக்கார இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அருண சந்திரகலாவை சந்தித்து வேறு ஒருவரை திருமணம் செய்தால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து மனமுடைந்த சந்திரகலா தனது பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவல் அறிந்த சந்திரகலாவின் குடும்பத்தினர் கோனனகுன்டே காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சந்திரகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே ஜிகனி காவல் நிலையத்தில் தங்கள் மகளை அருண் தான் மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி சந்திரகலாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அருணை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.