தமிழ்நாடு

மகளின் படிப்பிற்காக சேமித்து வைத்திருந்த வியாபாரியின் 30 பவுன் நகை, ரூ75,000 பணம் கொள்ளை

மகளின் படிப்பிற்காக சேமித்து வைத்திருந்த வியாபாரியின் 30 பவுன் நகை, ரூ75,000 பணம் கொள்ளை

kaleelrahman

கிருஷ்ணகிரியில் மகளின் மருத்துவம் சார்ந்த படிப்பிற்காக பானிபூரி கடை வியாபாரி சேமித்து வைத்திருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.75,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்து கரடிகொல்லப்பட்டி சவுளூர் பகுதியைச் சேர்ந்தவர் சாம்ராஜ், (52), இவர், தனது குடும்பத்துடன் சென்னை ஆவடியில் தங்கி, அங்கு பானிபூரி கடை நடத்தி குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க அரசு கொண்டுவந்த ஊரடங்கால் தனது குடும்பத்துடன் இரண்டு மாதம் சவுளூரில் உள்ள வீட்டில் வந்து தங்கி இருந்து விட்டு, கடந்த 29ஆம் தேதி இவர் மீண்டும் குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார்.

தனது மூத்த மகள் மஞ்சு 12ம் வகுப்பு முடித்துள்ள நிலையில் இவரை, மருத்துவம் சார்ந்த படிப்பில் சேர்ப்பதற்காக, வீட்டில் வைத்திந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.75,000 பணத்தை எடுத்துச் செல்வதற்காக இன்று அதிகாலை சவுளூர் கிராமத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த 30 பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

பின்னர் மத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து சாம்ராஜ் கூறுகையில், தனது மாமனார் வீட்டார் சீதனமாக 15 பவுனுக்குமேல் வழங்கியதாகவும், தனக்கு இரண்டும் பெண் பிள்ளைகள் என்பதால் சிறுக சிறுக சம்பாதித்து அவர்களின் எதிர்காலத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை, பணம் திருடப்பட்டு விட்டதாகவும், மேற்கொண்டு தனது மகள் மேற்படிப்பிற்கு என்ன செய்வதென்று வழி தெரியாமல் நிற்பதாக கூறினார்.