போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தனியார் பள்ளி ஒன்றில் என்சிசி பயிற்சி முகாம் நடந்துள்ளது.
இதில் போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால், 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த பள்ளியில் அந்த பயிற்சிக்கு சென்ற மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மாணவியின் புகாரை அடுத்து அந்த போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், அவருக்கு உதவியாக இருந்த உதவி பயிற்சியாளர்கள், தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், சக ஆசிரியர்கள் என 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரு குழுக்கள் உருவாக்கப்பட்டது. குறிப்பாக சிறப்பு புலனாய்வுக் குழு உருவாக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உளவியல் ரீதியாக பயிற்சி அளிக்க சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு விசாரணைக் குழு உருவாக்கப்பட்டது. இந்த இரு குழுக்களும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக விசாரணை மற்றும் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே போலி பயிற்சியாளர் சிவராமன், கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி அருகே இருக்கக்கூடிய தனியார் பள்ளியில், இதேபோல் என்சிசி பயிற்சி முகாம் நடத்தியுள்ளார். அங்கு 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த புகாரின் பேரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சிவராமன் மீது இரு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த இரு வழக்குகளிலும் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஜனவரி மாதம் நடந்த போலி பயிற்சி முகாமில், ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ளார். அதை அவர் அந்த பள்ளியில் முதல்வருக்கு தெரிவித்துள்ளார். அந்த முதல்வர் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் மறுத்ததன் காரணமாக, இந்த வழக்கை விசாரிக்க கூடிய எஸ்ஐடி எனப்படும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அந்த தனியார் பள்ளியின் பெண் முதல்வரை கைது செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி சிவராமன், காவல்துறையினரின் கைதுக்கு அஞ்சி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிவராமனின் தந்தையும் உயிரிழந்தார். அடுத்தடுத்த இந்த இரு உயிரிழப்புகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதுதொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது இருவரது உயிரிழப்புகள் தொடர்பான விசாரணை மனுவையும் காவல்துறையினர் தாக்கல் செய்ய உள்ளனர். தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற பல மாவட்டங்களிலும் போலி என்சிசி முகாம் நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையொட்டி தனியார் பள்ளி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையிலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.