கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் மேற்கொண்ட அகழாய்வில் மூன்று கால்களுடன் கூடிய மண் குடுவைகள், மண் குவளை ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மயிலாடும்பாறை, கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் ஆகிய 10 இடங்களில் தற்போது அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், தொகரப்பள்ளி அருகே உள்ள மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. தொல்லியல் துறையின் துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள், தொல்லியல் ஆய்வு மாணவ, மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த அகழாய்வில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கல்திட்டை பகுதியில் உடைந்த நிலையில் 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாளும் நான்கு பானைகளும் கண்டெடுக்கப்பட்டன. அதே பகுதியில் உள்ள கல்திட்டையில் தற்போது மூன்று கால்களுடான மண் குடுவைகள், உடைந்த நிலையில் உள்ள மண் குவளை, இரும்புக் கத்திகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.