தமிழ்நாடு

பச்சை மண்டலமாகவே கிருஷ்ணகிரி நீடிப்பது ஏன்?: விளக்கம் அளித்த பீலா ராஜேஷ்

பச்சை மண்டலமாகவே கிருஷ்ணகிரி நீடிப்பது ஏன்?: விளக்கம் அளித்த பீலா ராஜேஷ்

webteam

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் அம்மாவட்டம் தொடர்ந்து பச்சை மண்டலமாகவே உள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே கொரோனா இல்லா பச்சை மண்டலமாக உள்ளது. இந்நிலையில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டமும் பச்சை மண்டலத்திலிருந்து ஆரஞ்ச் மண்டலமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முதியவர் ஆந்திராவிலிருந்து வந்ததாகவும், அவருக்கு சேலம் சோதனைச் சாவடியிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நேரடியாக அவர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அவரது பெயர் சேலம் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாக பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து கொரோனா இல்லா பச்சை மண்டலமாகவே நீடிக்கிறது. இதற்கிடையில் குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து வந்த 13 பேர் கிருஷ்ணகிரி எல்லையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்