தமிழ்நாடு

சென்னை வரும் குடிநீர்.... ஆந்திராவில் திருட்டு...

webteam

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிருஷ்ணா நதி நீரை ஆந்திர மாநில‌ விவசாயிகள் மின்மோட்டார் மூலம் சட்டவிரோதமாக பாசனத்த‌ற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழகம் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையின் குடிநீர்த் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து 2‌.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படப்பட்டு வருகிறது. கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 1700 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டில் காலதாமதமாக 308 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. தமிழகத்திற்கு திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீரை ஆந்திர மாநிலம் காளஹ‌ஸ்தி பகுதியில், பல்வேறு இடங்களில் மின்மோட்டார் மூலம் உறிஞ்சி அம்மாநில விவசாயிகள் பாசனத்த‌ற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னைக்கு குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

ஏற்கெனவே நவம்பரில் புதிய தலைமுறையில் செய்தி வெளியிட்டதின் அடிப்படையில் விவசாயிகளின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆந்திர அரசு தற்காலிகமாக தண்ணீர் திறப்பை நிறுத்தியது. இந்த நிலையில் தமிழக முதல்வரின் பேச்சு வார்த்தைக்கு பின் மீண்டும் கடந்த 9-ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஏற்கெனவே சென்னையின் குடிநீர் ஆதாரங்களெல்லாம் வறண்டு சென்னை, கிருஷ்ணா நீரை எதிர்நோக்கி இருக்கும் வேளையில் ஆந்திர விவசாயிகளின் தொடர் அத்துமீறலால் சென்னை கடும் குடிநீர் பற்றாக்குறையை சந்திக்கும் நிலை ஏற்படும் என அஞ்சப்படுகிறது.