சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விவேக்கின் சகோதரி கிருஷ்ணபிரியா விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
சசிகலா உறவினர் வீடுகள், அலுவலகங்களில் தொடர்ச்சியாக 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சசிகலா சிறையில் இருந்து பரோலில் வந்தபோது சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தான் தங்கியிருந்தார். அந்த வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கிருஷ்ணபிரியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விவேக்கின் சகோதரி கிருஷ்ண பிரியா ஆஜராகியுள்ளார். அவருடன் அவரது சகோதரி ஷகீலாவும் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். இவர்கள் இருவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணையின்போது இருவரும் விளக்கமளிப்பார்கள் என கூறப்படுகிறது.