கொரோனோ பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு உணவு தானிய அங்காடி நாளை மீண்டும் திறக்கப்படுகிறது.
கொரோனா பரவலின் ஹாட்ஸ்பார்டாக கோயம்பேடு காய்கறி சந்தை மாறியதால் கடந்த மே மாதம் 5ஆம் தேதி கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த காய்கறி, பழங்கள், மலர்ச்சந்தைகள் மட்டுமில்லாது உணவு தானிய சந்தைகளும் முழுமையாக மூடப்பட்டன. உணவு தானிய மளிகைப் பொருட்கள் விற்பனை சந்தையில் உள்ள 492 கடைகளும் மூடப்பட்டதால், அங்கு பணி செய்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இந்த நிலையில் வியாபாரிகள் சார்பில் வைக்கப்பட்ட நீண்ட கோரிக்கைகளுக்கு பிறகு அரசின் உத்தரவின் பெயரில் உணவு தானிய மளிகை பொருள் அங்காடிகள் நாளை திறக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி காய்கறி, கனி மற்றும் மலர் அங்காடிகள் திறக்கப்படுகின்றன. அதேசமயம் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.