கோவையில் போலீசார் துரத்தியதில் விபத்துக்குள்ளாகி ஒருவர் படுகாயம் அடைந்ததை அடுத்து பொதுமக்கள் காவல் துறையினரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை உடையம்பாளயத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். வாகன சோதனையின்போது காவல் துறையினர் மறித்தபோது நிறுத்தாமல் சென்றிருக்கிறார். அவரை துரத்தி சென்ற காவல் துறையினர் முதுகில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சசிகுமார் நிலை தடுமாறி சாலையில் விழவே எதிரே வந்த அரசு பேருந்து அவரது காலில் ஏறியிருக்கிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் காவல் துறையினரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பாக இயங்கக்கூடிய இடத்தில் சட்ட விரோதமாக டாஸ்மாக் கடை இயங்குவதும், அதற்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதுமே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனை அடுத்து பலத்த காயமடைந்த சசிகுமார் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.