தமிழ்நாடு

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை ! துப்பு கொடுத்தால் சன்மானம்: காவல்துறை அறிவிப்பு

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை ! துப்பு கொடுத்தால் சன்மானம்: காவல்துறை அறிவிப்பு

Rasus

கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை காணவில்லை என்று கடந்த 25-ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் கீழ் போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் புதூர் என்ற இடத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நேற்று காலை சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், கழுத்தை நெறித்து கொல்லப்பட்டதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு கோவை துடியலூர் ஜங்சனில் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இவ்வழக்கு தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பெற்றோர்கள் சந்தேகம் தெரிவித்த நபர்களிடம் மட்டும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் நிலையில் இதுவரை யாரையும் கைது செய்யமுடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்க விரும்புவோர், 94981 04407, 94431 22744, 94981 73353, 94981 74226, 94981 74227, 94981 01198, 0422 2642990 ஆகிய எண்களில் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.