தமிழ்நாடு

கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

webteam

கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்க அணையிலிருந்து வினாடிக்கு 620 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

திருவள்ளூர், சென்னை மாவட்ட மக்களின்  நீராதாரமாக கொசஸ்தலை ஆறு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை வெகுவாக குறைந்து விட்ட நிலையில், விவசாயம் பாதிக்கப்பட்டு, கடும் குடிநீர் வறட்சி ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது.

திருத்தணி பகுதியில் நேற்று அதிக பட்சமாக 19 செ.மீ மழை பதிவானது. இதேபோல் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளை ஒட்டி உள்ள தமிழக எல்லை ஆந்திர கிராமங்களில் கன மழை பெய்து வருவதால், சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் நீர்த் தேக்க அணை வேகமாக நிரம்பி வருகின்றது. அணையின் முழுக் கொள்ளளவு 230 மீட்டர் அளவிற்கு நீர் உயர்ந்து விட்டதால், நேற்று காலை  தமிழக  அதிகரிகள் முன்னிலையில் ஆந்திர பொதுப் பணித்துறையினர் அணையிலிருந்து உபரி நீரை வினாடிக்கு 620 கன அடி விதம் திறந்துவிட்டனர். 

அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. உபரி நீர் தமிழக எல்லையான பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் இரவுக்குள் வந்து சேரும் என்று எதிர்பாக்கப்படுகின்றது. இதனால், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகள் சார்பில் அதிகாரிகள் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று உஷார்ப்படுத்தப்பட்டு வருகின்றனர்.