உளுந்தூர்பேட்டை அருகே உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழாவுக்கு கொரோனா நோய்த்தொற்று காரணமாக தடை விதிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திருநங்கைகள் கோயிலுக்கு நேரில் சென்று சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் என்று அழைக்கக்கூடிய திருநங்கைகள் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவில் பங்கேற்பது வழக்கம். அப்போது கோயில் பூசாரிகளின் மூலம் தாலி கட்டிக்கொண்டு அன்று இரவு முழுவதும் இறைவனை நினைத்து சந்தோஷமாக ஆடி பாடி மகிழ்ந்த பின்னர் காலையில் தங்களது தாலியை துறந்து விதவைகள் கோலத்தோடு செல்லும் ஐதீகம் உள்ளது.
இந்தத் திருவிழாவில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகளும் வருகை தந்து விழாவில் சிறப்பிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களின் பாரம்பரிய திருவிழாவில் பங்கேற்க முடியாத சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள், இன்று கூவாகம் கோயிலுக்கு நேரில் வந்து கூத்தாண்டவர் என அழைக்கப்படும் அரவானுக்கு அர்ச்சனை தட்டில் தாலி மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபட்டு சென்றனர். இதனைத்தொடர்ந்து இறைவனை நினைத்து பெரிய அளவிலான சூடம் ஏற்றி கும்மியடித்தும், தேங்காய் உடைத்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.
மேலும் இதுகுறித்து அவர்கள் நம்மிடம் கூறுகையில் “ எங்களை போன்ற மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் அனைவரும் ஒன்று கூடி தங்களின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான். ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக கூத்தாண்டவர் கோயில் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு நெருக்கமான நட்புகளை சந்திக்க முடியவில்லை. உள்ளூரில் உள்ள திருநங்கைகள் மட்டுமே கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர்.
வழக்கமான நிகழ்வான தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வு பெரிய அளவில் நடைபெறவில்லை, விரல் விட்டு எண்ணும் அளவில் மட்டுமே திருநங்கைகள் அங்கு சாமி தரிசனம் மேற்கொண்டனர். கோயிலில் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர் மக்கள் யாரும் கோயிலுக்குள் வராமலும் பூசாரி மட்டும் பூஜை செய்யும் நிலைதான் ஏற்பட்டது. இந்த சூழல் தங்களுக்கு பெரிய வருத்தம் அளிக்கிறது”என்றனர்.இன்று நடைபெறக்கூடிய தேர்த்திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜோதி நரசிம்மன்