தமிழ்நாடு

கொங்குநாடு மக்களின் எதிர்பார்ப்பு என்றால் செய்ய வேண்டியது அரசின் கடமை: நயினார் நாகேந்திரன்

கொங்குநாடு மக்களின் எதிர்பார்ப்பு என்றால் செய்ய வேண்டியது அரசின் கடமை: நயினார் நாகேந்திரன்

kaleelrahman

மாநிலங்கள் இரண்டாக பிரிப்பது மாநில மக்களின் எதிர்பார்ப்பையும் நோக்கத்தையும் உணர்த்துகின்றது. மாநில மக்களுடைய எதிர்பார்ப்பு அவ்வாறாக இருக்கும் என்றால் அதை செய்ய வேண்டியது அரசின் கடமை என்று திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு திருஉருவச் சிலைக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் , மற்றும் வருவாய் அலுவலர் பெருமாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கொங்குநாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “நம்ம ஊரு பக்கத்தில் வல்லநாடு இருக்கிறது. தேனிக்கு பக்கத்தில் வருஷநாடு இருக்கிறது. அதையெல்லாம் மாநிலமாக பிரிக்கலாமா? எதற்கு அவங்களுக்கு பயம், பயமே தேவையில்லை எல்லாம் தமிழ்நாடு தான். ஆனால் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆந்திரா இரண்டாக பிரிந்து இருக்கிறது. உத்தரபிரதேசம் இரண்டாக பிரிந்து இருக்கிறது. மாநிலங்கள் இரண்டாக பிரிப்பது மாநில மக்களின் எதிர்பார்ப்பையும் நோக்கத்தையும் உணர்த்துகின்றது. மாநில மக்களுடைய எதிர்பார்ப்பு அவ்வாறாக இருக்கும் என்றால் அதை செய்ய வேண்டியது அரசின் கடமை” என தெரிவித்தார். மேலும், “கொங்குநாடு தமிழ்நாட்டில் தான் உள்ளது. அது உங்களுக்குத் தெரியும், ஏற்கெனவே ஒன்றிய அரசு என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எல்லாமே குறுகிய கண்ணோட்டத்தோடு போய்க் கொண்டிருக்கிறது” என்றார் நயினார் நாகேந்திரன்.