நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு நாளை டிசம்பர் 23ஆம் தேதி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக உள்ள கோடநாடு தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 24ஆம் தேதி ஒரு கும்பல் புகுந்து காவலாளியை கொலைசெய்து, பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறுப் பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக கூறப்படும் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி தனபால் மற்றும் ரமேஷை போலீஸார் சேலத்தில் வைத்து கைதுசெய்தனர், இவர்கள் மீது சாட்சிகளை கலைத்தல், சாட்சி சொல்லவிடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளில் கைதுசெய்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ள நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்மந்தமான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடநத மாதம் 26 ம் தேதிக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் ஆகிய இருவர் மட்டும் ஆஜராகினர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கிறிஞர் ஷாஜகான், அரசு வழக்கறிஞர் ஆனந்த் ஆகியோர் ஆஜராகினர். விசாரணை தொடங்கியதும் மேல் விசாரணை நடைபெற்று வருவதால் கால அவகாசம் தேவை என்ற வாதத்தை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளை( டிசம்பர் 23-ம்) தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.