தமிழ்நாடு

கோடநாடு கொலை விவகாரம்: 4 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

கோடநாடு கொலை விவகாரம்: 4 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

Rasus

கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரை 15 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கேரளாவைச் சேர்ந்த இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 23-ஆம் தேதி நள்ளிரவு கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் அறைகளில் கொள்ளையடிக்கப்பட்டது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷன், உதயகுமார், தீபு, சந்தோஷ் சமி ஆகியோரை கோத்தகிரியில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய காவல்துறையினர், அவர்களை குன்னூரில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, கேரள மாநிலம் மலப்புரத்தில் ஜித்தின் ஜோய் என்பவரையும், வயநாட்டில் சம்ஷீர் அலி என்பவரையும் கேரள போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்துள்ளனர். அவர்களிடம் கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், கோடநாடு விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்த சயான் விபத்தில் காயமடைந்தார். உயிரிழந்த அவரது மனைவி, மகளின் பிரேத பரிசோதனை திருச்சூர் மருத்துவமனையில் நடந்தது. பரிசோதனை அறிக்கையில், இருவரும் கொலை செய்யப்படவில்லை என்றும், விபத்தில்தான் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.