கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கச் செல்லும் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டு, சில பொருட்கள் திருடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சயான் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அதிமுக அம்மா பேரவை கோவை மாவட்ட இணைச்செயலாளர் அனுபவ் ரவியிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடநாடு கொலை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் இறுதியாக அனுபவ் ரவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், அனுபவ் ரவி தன்னிடம் விசாரணை மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.