தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி குறித்து பேசுவதற்கு ஏழு பேருக்கு தடை நீட்டிப்பு

முதல்வர் பழனிசாமி குறித்து பேசுவதற்கு ஏழு பேருக்கு தடை நீட்டிப்பு

webteam

முதல்வர் பழனிசாமி தொடர்ந்த வழக்கின் நோட்டீஸை பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் வாங்காததால் டெல்லி மற்றும் கேரளாவில் உள்ள செய்தி தாள்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில், தன்னை தொடர்புப்படுத்தி ஆவணபடம் வெளியிட்டதற்காக முதல்வர் பழனிசாமி மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், சயன், வாலையாறு மனோஜ், ஜிபின், ஷிஜா அணில்,ராதாகிருஷ்ணன் ஆகிய 7 எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டதுடன், 1 கோடியே 10 லட்சம் இழப்பீடும் கோரியிருந்தார். 

இந்த வழக்கு கடந்த ஜனவரி 23ல் விசாரித்த உயர் நீதிமன்றம், முதல்வர் பற்றி பேசவும், எழுதவும் தடை விதித்ததோடு, வழக்கு குறித்து ஏழு பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. நோட்டீஸ் அனுப்பி அதை பெற்றுக்கொண்டதற்கான நடைமுறை முடிவடையாததால் ஜனவரியில் விதிக்கப்பட்ட  தடை தற்போது வரை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதில் சயான் மட்டும் பெற்றுக் கொண்டதாகவும், மாத்யூ சாமுவேல் நண்பரான ஷிவானி அந்த நோட்டீஸை வாங்க மறுத்துவிட்டதாகவும், மற்ற 5 பேருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பி வந்துவிட்டதாகவும் முதல்வர் பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, நோட்டிஸ் பெறாத மாத்யூ சாமுவேல், வாலையாறு மனோஜ் உள்ளிட்ட 6 பேருக்கு தினசரி செய்திதாள் மூலமாக நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி தரப்புக்கு அறிவுறுத்தினார். அதன்படி, டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு மற்றும் நவ் பாரத் டைம்ஸ் பத்திரிகைகளிலும், கேரளாவில் உள்ள மாத்ரூபூமி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளிலும் முதல்வரின் வழக்கு குறித்து, 6 பேருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்ப வந்தது குறித்தும் வெளியிடுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை முதல்வர் பழனிசாமி குறித்து பேசுவதற்கு ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட தடையையும் நீட்டித்து உத்தரவிட்டார்.