தமிழ்நாடு

கொடைக்கானல்: இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்தபடி வரும் இளைஞர்கள்; சுற்றுலா பயணிகள் அச்சம்

கொடைக்கானல்: இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்தபடி வரும் இளைஞர்கள்; சுற்றுலா பயணிகள் அச்சம்

kaleelrahman

கொடைக்கானலுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள் சாகச பயணம் மேற்கொள்வதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு, வார தொடர் விடுமுறை மற்றும் ஆடிப்பெருக்கு விடுமுறைகள் எதிர்நோக்கி இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மொத்தம் மொத்தமாக சக்திவாய்ந்த இரண்டு சக்கர வாகனங்களில், அச்சுறுத்தும் வகையில் மலைச்சாலையில் பயணித்து வருவதால் இன்று இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. சென்பகனூர் பகுதியில் கட்டுப்பாடில்லாமல் வேகமாக வந்த இளைஞரின் வாகனம் சறுக்கி, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது போன்ற தொடர் சம்பவங்கள் இனி அடிக்கடி நடைபெறும் வாய்ப்புள்ளதாக உள்ளுர் வாசிகள் கூறுகின்றனர். கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் சுற்றுலாவை அமைதியாக ரசிக்காமல், மது போதையில் சாகசம் செய்தபடி இருசக்கர வாகனங்களை இயக்குவதால், அமைதியான சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

வார விடுமுறை நாட்களில் குவியும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, மக்கள் கூடும் இடங்களில்  கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றவும், முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதித்தும், வாகனங்கள் நிறுத்தத்தை நெறிமுறைப்படுத்தியும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டாட்சியர் முருகேசன், சுற்றுலா பயணிகளை நெறிமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் நேரடியாக ஏரிப்பகுதி, வெள்ளிநீர்வீழ்ச்சி சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

மருத்துவத்துறையின் உதவியோடு, மலைப்பகுதிக்கு வரும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். எதிர்வரும் காலங்களில் இதுபோல தொடர் விடுமுறை காலங்களில், மலைப்பகுதியில் குவியும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதகவும், கோட்டாட்சியர் தெரிவித்தார்.