கொடைக்கானல் ஏரிச்சாலையில் குதிரை சவாரி மற்றும் மிதிவண்டிகளை இயக்க சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சுற்றுலா தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் ஏரிச்சாலையில் குதிரை ஓட்டுபவர்கள் தங்கள் குதிரைகளுக்கு உணவளிக்க முடியாமல் அவதியுற்று வந்தனர்.
இந்நிலையில், குதிரை ஓட்டுனர்களுக்கும், மிதிவண்டி வாடகைக்கு விடுபவர்களுக்கும் சிறப்பு அனுமதிகொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்ச அளவிலான குதிரைகளை, சுழற்சி முறையில் இபாஸ் பெற்றுவரும் பயணிகள் மட்டும் சவாரி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக கொடைக்கானலுக்கு வரும் பயணிகள் குதிரை மற்றும் மிதிவண்டி சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.